கேரளாவில் புகழ்பெற்ற கோயிலில் நடிகை அமலாபாலுக்கு நேர்ந்த கொடுமை - "2023-லும் இப்படியொரு நிலையா?" - குமுறல்
கேரள மாநிலம் கொச்சி பகுதியில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் தேவி பார்வதியின் சன்னிதியானது வருடத்தில் 12 நாட்களுக்கு மட்டுமே திறக்கப்படும்... அதுவும் திருவாதிரை பண்டிகையை ஒட்டி 12 நாட்கள் மட்டுமே திறக்கப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இதன்படி இந்த கோயிலனாது கடந்த 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை திறக்கப்பட்டது...
மாற்று மதத்தினர் இந்த கோயிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பது வழக்கமாக உள்ளது. இதனிடையே இந்த கோயிலுக்கு தன் உறவினர்களுடன் நடிகை அமலாபால் தரிசனம் செய்ய வந்துள்ளார்.
அப்போது கோயில் நிர்வாகத்தினர் நடிகை அமலாபாலை தடுத்து நிறுத்தி நீங்கள் இந்து மதத்திற்கு மாறி விட்டீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு இல்லை என பதில் அளித்திருக்கிறார் அமலாபால்...
அப்படி என்றால் உங்களை கோயிலின் உள்ளே அனுமதிக்க முடியாது என கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் வேறு வழியின்றி கோயிலின் வெளியே நின்ற படி சுவாமியை தரிசனம் செய்து விட்டு கிளம்பியிருக்கிறார் அமலாபால்...
பின்னர் கோயில் வருகை பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவிட்ட அமலாபால், திருவைராணிக்குளம் மகாதேவர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன் என்றும், ஆனால் சுவாமியை அருகே சென்று தரிசிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனால் கோயிலுக்கு வெளியே நின்றபடி தரிசிக்கும் சூழல் ஏற்பட்டதாக கூறியிருக்கும் அமலாபால், 2023-ஆம் ஆண்டிலும் மத பாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக இருக்கிறது என தன் மன குமுறலை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலை விரைவில் மாறும் என நம்புவதாக கூறியிருக்கும் அமலாபால், மக்களை மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனிதர்களாக மதிக்கும் காலம் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமலாபாலின் இந்த பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோயில் தரப்பும் தன் விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
உள்ளூர்வாசிகளில் மாற்று மதத்தினர் கோயிலுக்குள் வரும் வழக்கமில்லை என்றாலும் வெளியூரை சேர்ந்த மாற்று மதத்தினர் தெரிந்தோ தெரியாமலோ கோயிலுக்குள் வந்து செல்வார்கள் என்றும், ஆனால் அமலாபால் பிரபலம் என்பதால் அவரை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது...
கிறிஸ்தவரான அமலாபாலை கோயிலுக்குள் அனுமதித்தால் நடைமுறையை மீறியதாக தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்பதால் அவரை அனுமதிக்கவில்லை என்றும் கோயில் தரப்பு தெரிவித்திருக்கிறது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸை அனுமதிக்காதது தொடர்பான சர்ச்சையும் பல வருடங்களாக உள்ள சூழலில் இப்போது அமலாபாலுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....