'கங்குவா' படப்பிடிப்பு தளத்தில் விபத்து..நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா

x

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 'கங்குவா' திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி கொண்டே செல்லும் நிலையில், அண்மையில் தான் கங்குவா திரைப்படம் 38 மொழிகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்தது, பட தயாரிப்பு நிறுவனம்.இந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு நடந்த கங்குவா படப்பிடிப்பின் போது, நடிகர் சூர்யா, விபத்தில் இருந்து நூலிழையில் உயிர்தப்பியதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கங்குவா படப்பிடிப்பில் சூர்யாவின் போஷன்கள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு விட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படம் பிடிக்கப்பட்டது. அதில் நடிகர் சூர்யா மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்ட சண்டை காட்சி என்பதால் ரோப் கேமரா கொண்டு படம் பிடிக்கப்பட்டதாகவும், அப்போது திடீரென ரோப் கேமரா அறுந்து என்பது கிலோமீட்டர் வேகத்தில் சூர்யாவை நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.உடனடியாக ஸ்டண்ட் கலைஞர்கள் குரல் எழுப்பியதால், சூர்யா பிடித்து இழுக்கப்பட்டதாகவும், அதிக எடை கொண்ட அந்த கேமரா அவரது தோள் மீது தாக்கியதால் அதில் அவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

சுதாரிக்காவிட்டால் ரோப் கேமரா சூர்யாவின் தலையை தாக்கி இருக்க கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ள படப்பிடிப்பு மீண்டும் வெள்ளி அல்லது சனிக்கிழமை ஸ்டண்ட் மாஸ்டர்கள் வைத்து நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே இதற்கு முன்னர் இதே ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்ததில் இரண்டு ஊழியர்கள் பலியானதும்... மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் போது, பிரேக் பிடிக்காமல் ஓடிய வாகனத்தால் விபத்தில் இருந்து நடிகர் விஷால் தப்பித்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது.

இதற்கு முன்பு பிகில் படப்பிடிப்பின் போதும், கிரேனில் இருந்து லைட் விழுந்து ஒருவர் இறந்து போனதும், காலா படப்பிடிப்பின் செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்து போனதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இப்படி தொடர்ந்து படப்பிடிப்பு தளங்களில் விபத்துகள் அதிகரித்து வருவது, படப்பிடிப்பு தளத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழ காரணமாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்