லாரியில் குளு குளு ஏ.சி கட்டாயம்...மத்திய அரசின் அதிரடி திட்டம்- “அத்தியாவசிய பொருட்கள் விலை எகிறும்?“

x

லாரி ஓட்டுனர் கேபின்களுக்கு ஏ.சி வசதி செய்வதை கட்டாயமாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.

2025ல் அனைத்து லாரிகளிலும் உள்ள ஓட்டுனர் கேபின்களில் கட்டாயம் ஏ.சி வசதி செய்யப்பட வேண்டும் என்று சட்டம் இயற்ற மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓட்டுனர் கேபின்களை ஏ.சி செய்தால், டீசல் செலவு 25 சதவீதம் வரை உயரும் என்றும், பராமரிப்பு செலவுகள் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

சரக்கு போக்குவரத்து துறையில், தென் இந்தியாவின் கேந்திரமாக திகழும் நாமக்கல்லைச் சேர்ந்த சுமார் 50,000 லாரிகள் இந்தியா முழுவதும் இயக்கப்படுகின்றன.

லாரி ஓட்டுனர் கேபின்களில் ஏ.சி வசதி செய்தால், லாரிகளின் விலை 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டீசல் செலவு மற்றும் பராமரிப்பு செலவுகளும் அதிகரித்தால், லாரி வாடகை உயர்ந்து, பொருட்களின் விற்பனை விலைகளும் உயரும் என்று லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஓட்டுனர் கேபின்களை ஏ.சி செய்வதன் மூலம், கடும் வெப்பத்தினால் ஓட்டுனர்களின் உடல் நலம் பாதிப்படைவது தடுக்கப்பட்டு, விபத்துகள் குறையும் என்று லாரி தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கு வரவேற்பு தெரிவிக்கின்றன.

ஏ.சி செய்யப்பட்ட கேபின்களை கொண்ட லாரிகள் விற்பனை அதிகரித்துள்ளதாக டாடா மோட்டர்ஸ், வோல்வோ எய்ச்சர் நிறுவனங்கள் கூறுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்