தங்கையை காதலித்த இளைஞர்.. சிறுவனை வைத்து கழுத்தறுத்து கொன்ற அண்ணன் - சேலத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
தனது தங்கையை காதலித்த இளைஞரை அண்ணன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணி குறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
கொத்தனார் வேலை பார்த்து வந்த இளைஞரை துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற மூன்று பேர்...
தங்கையை காதலித்து வந்த அவரை, பல முறை கண்டித்தும் கேட்காததால் 17 வயது சிறுவனின் உதவியுடன் அண்ணன் அரங்கேற்றிய வெறிச்செயல் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். 23 வயதான இவர், கொத்தனாராக வேலை பார்த்து வந்த நிலையில், தனது கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வந்த சிறுமி ஒருவருடன் சக்திவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது...
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் யாருக்கும் தெரியாமல் ஒருவரையொருவர் மறைமுகமாக காதலித்து வந்துள்ளனர்...
இதில், சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டிலேயே தான் இருந்ததாக கூறப்படும் நிலையில், அடிக்கடி உறவினர் வீட்டிற்கு வந்து செல்லவே, இருவருக்குள்ளான நெருக்கம் அதிகமாகியுள்ளது....
இது நாளடைவில் சிறுமியின் வீட்டிற்கு தெரியவரவே, ஆத்திரமடைந்த சிறுமியின் தரப்பினர் சக்திவேலையும், அவரது குடும்பத்தினரையும் பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது..
இருப்பினும், இருவருக்குமிடையேயான காதல் தொடரவே சிறுமியின் தரப்பினர் காவல்நிலையம் சென்று முறையிட்டுள்ளனர்... இதில், சக்திவேலை குடும்பத்துடன் அழைத்த போலீசார், நீ காதலிக்கும் பெண் சிறுமி என்றும், அவருடன் பழகவோ, தனிமையில் சந்திக்கவோ கூடாது எனக் கூறி எச்சரித்து அனுப்பியுள்ளனர்...
போலீஸ் வரை சென்றதால், சக்திவேல் இனி தங்களின் பெண்ணுடன் பழக மாட்டார் என்று எண்ணியிருந்த சிறுமியின் வீட்டார், இதன்பின்பும் இருவருக்குமான பழக்கம் தொடர்வதை அறிந்து விரக்தியின் உச்சிக்கே சென்றுள்ளனர்...
இந்நிலையில், துக்கியப்பாளையம் அருகே தனது உறவினரான 17 வயது சிறுவன் மற்றும் புத்தூர் கொண்டலம்பட்டி பகுதியை சேர்ந்த மைக்கேல் ஆகிய இருவருடன் சேர்ந்து சிறுமியின் அண்ணனான சதீஸ்குமார் சதித்திட்டம் தீட்டி காத்து கொண்டிருந்துள்ளனர்...
அப்போது, சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சக்திவேலை, மறித்து தகராறு செய்த சக்திவேல், தன்னுடன் வந்த இருவருடன் சேர்ந்து அவரை கத்தியால் கழுத்தறுத்து கொன்று தப்பி ஓடியது பார்ப்போரை பதைபதைக்க வைத்தது...
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சக்திவேலின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சம்பவம் அறிந்து துடிதுடித்து போன அவரின் தாய் போலீசில் புகாரளித்தார்...
இதனடிப்படையில், விசாரணை நடத்தி வந்த போலீசார், மாணவியின் அண்ணன் சதீஸ்குமார் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்த நிலையில், தலைமறைவான மைக்கேல் என்பவரை வலை வீசி தேடி வந்தனர்...
இதில், மைக்கேலையும் போலீசார் கைது செய்த நிலையில், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...