சாலை விபத்தில் சிக்கிய பள்ளி மாணவன்...வார்டனின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்

x

சின்னாளபட்டியைச் சேர்ந்த செல்வபாண்டியின் தினேஷும், தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் கதிரவனும் சின்னாளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தனர். விடுதியில் தங்கியிருந்த இருவரும், வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த செவிலியரான சாம்சன் என்பவரின் மகள் ஸ்டெல்லா மேரியுடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் நேற்றிரவு மதுரை சாலையில் சென்றனர். வெள்ளோடு பிரிவு அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம், இவர்கள் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கதிரவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தினேஷ், மதுரை அரசு மருத்துவமனையிலும், ஸ்டெல்லா மேரி, திண்டுக்கல் தனியார் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இந்நிலையில், மாணவர்களை வெளியே செல்ல அனுமதி கொடுத்த விடுதிக் காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கதிரவனின் உறவினர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்