ஊர் மக்களுக்கு எமனாகும் சாலை ..உயிரை காவு வாங்கும் அவலம்-சாலை அமைத்து தர கோரி கண்ணீர் மல்க கோரிக்கை
உடுமலை அருகே குருமலையில் சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி செல்லப்பட்ட மலைவாழ் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலைக்கு அருகே அமைந்துள்ளது குருமலை மலை கிராமம். இந்த பகுதியில் ஏராளமான மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதிக்கு முறையான சாலை வசதி இல்லாததால், மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக 5 கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பாதையில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
இந்நிலையில் குறுமலையைச் சேர்ந்த 37 வயதான பழனிச்சாமி என்பவருக்கு திடீரென , உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அப்பகுதி மக்கள் ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால், ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து குறுமலையிலிருந்து திருமூர்த்தி மலை வரை, கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு டோலி கட்டி, அவரை சுமந்து கொண்டு சென்றுள்ளனர் உறவினர்கள்.
பின்னர் திருமூர்த்தி மலையில் இருந்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அவர் கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், முறையான சாலை வசதி இல்லாததால் அவரது உடலை, சொந்த ஊரான குருமலைக்கு திரும்ப எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து திருமூர்த்தி மலையிலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்கள் கிராமத்திற்கு, முறையான சாலை வசதி மற்றும் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.