குண்டும் குழியுமாக கிடக்கும் சாலை - விழி பிதுங்கி நிற்கும் பழங்குடியின மக்கள்
குமரியில் சேதமடைந்த பேச்சிப்பாறை-கோதையார் மலைப்பாதையை செப்பனிட கேட்டு புகார் அளித்தும், பல கட்ட போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மோதிர மலையை சுற்றி சுமார் 14 மலை கிராமங்கள் உள்ளன. பேச்சிப்பாறையில் இருந்து கோதை ஆறு வரை சுமார் 15 கிலோ மீட்டர் சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பலகட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நடந்து செல்லக்கூட முடியாதளவிற்கு சாலைகள் மோசமாக உள்ள நிலையில், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் இவ்வழியே செல்லும் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகின்றன. மலைவாழ் கிராம குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ள நிலையில், பழங்குடியின மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.