பச்சிளங் குழந்தையை விட்டுச் சென்ற தாய் - தேடி சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பச்சிளங் குழந்தையை விட்டுச் சென்ற தாய் - தேடி சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
புதுக்கோட்டையில், பிறந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு மாயமான பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி, பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு, பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த பெண்ணின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டதால், மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்தது. அதன் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை செய்ததில், தனது பெயர் ராணி என்றும், மணப்பாறையில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மணப்பாறையில் வசித்து வருவதாகவும், தனது கணவர் துபாயில் வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். அப்போது ராணியின் பதிலை போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர். விசாரணைக்குப் பிறகு போலீசார் அங்கிருந்து சென்ற நிலையில், அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்து மாயமானார். இதுதொடர்பாக, அந்தப் பெண் கூறிய முகவரியை விசாரித்தபோது, அது போலி என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.