பிணங்களுக்கு நடுவே அசைந்த கை..காலை பிடித்ததும் அரண்டு போன நபர்..ரயில் விபத்தில் சிக்கி உயிருடன் வருவது புதுசல்ல..

x

ஒடிசா ரயில் விபத்தில் இறந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட இரு வேறு சம்பவங்கள் நெகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

எதிர்பாராத விபத்து... தூக்கி வீசப்பட்ட சடலங்கள்... சிதைந்து கிடந்த உடல் பாகங்கள்... தண்டவாளம் முழுவதும் ரத்தசகதி... இப்படி பல குடும்பங்களின் நம்பிக்கை, கனவுகளை சிதைத்து... பலரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது , கோரமண்டல் ரயிலின் கோர விபத்து.

மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், சிதைந்த உயிரிழந்த உடல்கள்... அருகே உள்ள பாலசோர் பள்ளி அறைகளில் வைக்கப்பட்டன.

சடலங்கள் வைக்கப்பட்ட பிணவறையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் நுழைந்தபோது... அவரது கால்களை இரு கைகள் இறுக்கி பிடித்துக் கொண்டன... அரண்டு போன அந்த நபர்... உற்று கவனித்தபோது தான் தெரிந்தது... சடலம் என அவர் நினைத்தவர் உயிருடன் இருக்கிறார் என்று....

இரு கால்களையும் இழந்துவிட்ட நிலையில்... உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபரிடம் இருந்து... "நான் உயிருடன் தான் இருக்கிறேன்.... எனக்கு கொஞ்சம் தண்ணீ கொடுங்க..." என்ற முனங்கள் சத்தம் கேட்டது.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார் அந்த மீட்பு பணியாளர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் பெயர் ராபின் நையா.

மேற்கு வங்கத்தில் மாநிலம் சர்நேகாலி கிராமத்தை சேர்ந்த

35 வயதான ராபின், வேலைதேடி இந்த ரயிலில் பயணித்து விபத்தில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ராபினின் குடும்பம் இது போன்ற ரயில் விபத்தில் சிக்கி... எமனை வென்று வருவது இது முதன் முறையல்ல.

2010 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நாச வேலை காரணமாக ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட போது, அதில் பயணித்த ராபினின் மாமா இறந்துவிட்டதாக கருத்தப்பட்ட நிலையில், பிறகு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதே போல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மற்றோர் இளைஞரான 24 வயதான பிஸ்வாஜித் மாலிக்கும் சாவின் விளிம்பிற்கே சென்று உயிர் பிழைத்துள்ளார்.

ரயில் விபத்து செய்தியை பார்த்ததும்... உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் எடுத்துக்கொண்டு விரைந்து இருக்கிறார் , பிஸ்வாஜித்தின் தந்தை.

ஆனால் எங்கு தேடியும் மகன் கிடைக்காததால்... இறந்த உடல்கள் வைக்கப்பட்ட பாலசோர் பள்ளி அறையில் சென்று பார்க்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டார்.

மனம் ஏற்க மறுத்தாலும் வேறு வழியின்றி பிணவறைக்கு சென்றார். அங்கே, பிணவறைக்கு முன்பு சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அப்போது பிணங்களுக்கு நடுவே கையொன்று அசைவதை.. கண்டவர் ஒரு நிமிடம் உறைந்துபோனார்...ஆம் அதுதான் அவரது மகன், உடலில் பலத்த காயமடைந்து இருந்த தனது மகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததை அடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

துரதிஷ்டவசமான ரயில் விபத்தில் சிக்கிய இருவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்