தென்னை மரத்தில் இருந்த மின்சார கம்பி...பறிபோன விவசாயியின் உயிர் - கொந்தளித்த உறவினர்கள்

x

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடுக்குப்பம் புதுக்குடி தெருவை சேர்ந்த விவசாயி மணிகண்டன் இன்று காலை தன் வயலுக்கு ஜெயபால் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு வழியாக சென்றுள்ளார். உயர் மின்னழுத்த மின்சார கம்பி தென்னை மரத்தில் உரசியபடி இருந்த நிலையில், இதையறியாத மணிகண்டன் மரத்தின் ஓலையைப் பிடித்துள்ளார்... அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மணிகண்டன். உயர் மின்னழுத்த மின்சார கம்பிகளில் படும் தென்னை ஓலையை அகற்ற ஜெயபால் பல முறை கோரிக்கை வைத்த நிலையிலும், மின் துறை ஊழியர்கள் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. விளைவு மணிகண்டனின் உயிர் பரிதாபமாக பறிபோனது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முற்பட்ட போது, உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின் துறை ஊழியர்கள் வந்தால் மட்டுமே உடலை எடுக்க விடுவோம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்