15 வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை.. பள்ளி போகும் முன் பிணமாக வந்த சோகம்.. பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்
சிவகங்கையில் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், தமிழ்நாடு பள்ளி வாகனங்கள் சிறப்பு விதிகளை பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விரிவாக விவரிக்கிறது இந்த தொகுப்பு.....
15 வருடங்கள் தவமிருந்து பெற்ற குழந்தையை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் இந்த தாயை தேற்றுவதற்கு யாரிடமும் வார்த்தையில்லை... அவருடைய கண்ணீர் வேதனைக்கு மிகப்பெரிய அலட்சியமே காரணமாக இருக்கிறது.
மானாமதுரை அருகே பெரிய கோட்டையில் சென்ட் சார்லஸ் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து சென்ற வேன் விபத்தில் சிக்கியதில் 7 ஆம் வகுப்பு மாணவன் ஹரி வேலன் உயிரிழந்தார். பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் விபத்துக்குள்ளான பள்ளி வாகனம் முறையாக அனுமதியை பெறாமல் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு தாம்பரம் சேலையூரில் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி ஸ்ருதி, பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டை வழியே விழுந்து உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசை உயர்நீதிமன்றம் கடிந்துகொண்டதும், தமிழ்நாடு பள்ளி வாகனங்கள் சிறப்பு விதிகள் 2012 கொண்டு வரப்பட்டது. இப்போது விபத்தில் சிக்கிய வாகனம், எந்த விதிகளையும் பின்பற்றவில்லை என தெரியவந்துள்ளது.
சிவகங்கையில் விபத்தில் சிக்கிய வாகனம் சென்னையில் பதிவு செய்யப்பட்டு, அனுமதி பெறாமல் இயக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனம் மஞ்சள் நிறத்தை கொண்டிருக்கவில்லை. வாகனத்தில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்படவில்லை.
அவசர வழி கதவுகள், அவசர காலத்தில் கண்ணாடி உடைப்பான், முதலுதவி பெட்டி வசதிகள் என வாகனத்தில் எதுவும் இல்லை. குழந்தைகள் ஏற தாழ்தள படிக்கட்டுகள் இல்லை. வாகனத்திலிருந்து குழந்தைகளை ஏற்றி இறக்க உதவியாளர் இல்லை. வாகனத்தை இயக்கியவர் கனரக வாகனத்தை ஓட்டி அனுபவம் பெற்றவரும் இல்லை, பள்ளி வாகனம் ஓட்ட தகுதி பெற்றவரும் இல்லை. பள்ளி வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் நிரந்தர முறையில் பணி அமர்த்தப்படவில்லை. அவ்வப்போது புதிய ஓட்டுனர்களை நியமித்துள்ளதும் தெரியவந்திருக்கிறது.
இதுபோன்ற பல விதிகளை மீறிய வாகனம் எப்படி பள்ளி நிர்வாகம் தரப்பில் இயக்கப்பட்டது என்பது அதிர்ச்சி கேள்வியாக எழுந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து சிவகங்கையில் வட்டார போக்குவரத்து அலுவலர் பள்ளிகளில் ஆய்வு செய்து, அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளி வாகனம், ஆட்டோக்களில் தொடர்ச்சியாக அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிகரித்து காணப்படும் நிலையில், அரசு தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது மக்களுடைய வலியுறுத்தலாக உள்ளது.