உடலில் சூடு, குண்டூசியால் குத்தி, அடித்து, கடித்து... சாகும் முன் நரக வேதனையை அனுபவித்த குழந்தை

x

கண்ணை மறைத்த கள்ளக்காதலால், இரண்டரை வயது குழந்தை பலியான சம்பவம், சென்னையை அடுத்த மாங்காட்டில் அரங்கேறியுள்ளது. சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வபிரகாசம். 4 ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் குழந்தை இருந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, செல்வபிரகாசம் மனைவியை விட்டு பிரிந்து சென்ற நிலையில், குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்துள்ளது. இந்த நிலையில் தான், மனைவி மற்றும் குழந்தையை பார்க்க செல்வபிரகாசம் திடீரென கெருகம்பாக்கம் பகுதிக்கு வந்ததபோது, அங்கு மனைவி இல்லாததால் , அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார்.

அப்போது அக்கம்பக்கத்தினர் சொன்ன தகவலை கேட்டு, அதிர்ச்சியில் உறைந்துபோனார் செல்வபிரகாசம். இரண்டரை வயது குழந்தை இறந்துபோன தகவலை கேட்டு சோகத்தில் மூழ்கிபோன அவர், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் மனைவி லாவண்யா தகாத உறவில் இருந்து வந்த தகவலும், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகனை அடக்கம் செய்ததைக் கூட தன்னிடம் மனைவி தெரிவிக்கவே இல்லை என ஆதங்கப்பட்ட அவர், மகனின் இறப்பில் சந்தேகம் எழுந்ததால், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரைத் தொடர்ந்து, குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர். இதனிடையேதான், தலையில் காயம் பட்டு குழந்தை இறந்ததாக கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் வெளியானது. இறந்த குழந்தையின் உடலில் அதிகளவில் காயம் இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, லாவண்யா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டனை பிடித்து வந்த போலீசார், அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, பகீர் தகவல் வெளியானது. கணவனை பிரிந்த லாவண்யா, கெருகம்பாக்கத்தில் மணிகண்டன் வசிக்கும் வீட்டிற்கு கீழ் தளத்தில் குடியிருந்துள்ளார். லாவண்யா தனியாக இருப்பதை அறிந்த மணிகண்டன், அவருடன் நட்பு வைக்கும் விதமாக, சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார். பின்னர் இவர்களுக்கு இடையோன நட்பு தகாத உறவாக மாறியுள்ளது.அதனைத் தொடர்ந்து, லாவண்யாவின் வீட்டிற்கு மணிகண்டன் அடிக்கடி வந்து சென்றதுடன், அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் லாவண்யாவின் இரண்டரை வயது குழந்தை இவர்களின் நெருக்கமான உறவுக்கு தடையாக இருந்ததால், குழந்தையின் உடலில் சூடு வைப்பது, குண்டூசியால் குத்துவது மற்றும் மணிகண்டன் குழந்தையை பல்லால் கடித்து சித்திரவதை செய்ததும் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, மணிகண்டனின் இருசக்கர வாகனத்தில் குழந்தை ஏறி அமர்ந்தபோது, கோபமடைந்த அவர், குழந்தையை தூக்கி வீசியதில், தலையில் காயம் ஏற்பட்டதில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், லாவண்யா மற்றும் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தகாத உறவில் இடையூறாக இருந்த குழந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி கலந்த வேதனையை அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்