அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த மகனுக்கு மதுரையில் விழா- சொந்தபந்தத்தோடு அதகளப்படுத்திய பெற்றோர்
அமெரிக்கா சென்று குடியேறிய தம்பதி தங்கள் மகனுக்கு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் கலாச்சார விழா எடுத்த ஆச்சரியமூட்டும் சம்பவம் மதுரை திருமங்கலத்தில் நிகழ்ந்துள்ளது...
பன்னிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுதாகர் - ஜெயபுவனா தம்பதி. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நகரில் குடியுரிமை பெற்று சுதாகர் மென் பெறியாளராகவும், ஜெயபுவனா அரசு பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களது ஒரே மகனான 22 வயது மனு அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், கடந்த வாரம் 3 பேரும் தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த தங்கள் மகனுக்கு தமிழ் கலாச்சாரம், சொந்த பந்தங்களை அறிமுகப்படுத்த விரும்பிய இத்தம்பதி கலாச்சார விழா எடுக்க முடிவெடுத்தனர். இதையடுத்து, தங்கள் சொந்த பந்தங்கள் அனைவரையும் வரவேற்று மனுவுக்காக கலாச்சார விழாவை நடத்தியும் காட்டினர். பாரம்பரிய முறைப்படி தாய்மாமன் சீர் ஊர்வலம், தாய்மாமன் மாலை அணிவிப்பு நிகழ்வு, உறவினர்களை அறிமுக படுத்துவது என துவங்கிய இந்த விழாவில், நாட்டுப் புறக் கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.