டயர் வெடித்து பற்றி எரிந்த பஸ்..பேருந்துகுள்ளே சாம்பலான 25 பேர் - மகாராஷ்டிராவை உலுக்கிய கோர விபத்து
மகராஷ்டிராவில் விபத்தில் சிக்கிய பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பேருந்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 25க்கும் மேற்பட்டோர்
உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தின் சோக அலைகளே தணியாத நிலையில், மகராஷ்டிராவில் அரங்கேறியுள்ள இந்த கோர விபத்து மனதை உலுக்கியுள்ளது.
மகராஷ்ட்ரா மாநிலம் புல்தானா பகுதியில் சம்ருதி மாஹாமார்க் எக்ஸ்பிரஸ்வே சாலையில் அதிகாலை 2 மணியளவில் 33 பயணிகளுடன் புனே நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
திடீரென பேருந்தின் டயர் வெடித்ததால், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலை தடுமாறி மின் கம்பத்தில் உரசி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து சாலையை தேய்த்தபடியே கவிழ்ந்து விழுந்ததில், டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்க தொடங்கியது.
அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர். டமார் என்ற சத்தம் கேட்டு விழித்த பயணிகள் என்ன நடப்பதென்று சுதாரிப்பதற்குள் பஸ் பற்றி எரிய தொடங்கிவிட்டது. பலரும் ஜன்னல் வழியாக பயணிகள் தப்பிக்க முயற்சித்த நிலையில் 8 பேர் மட்டுமே காயங்களுடன் தப்பினர்.
பேருந்திற்குள் இருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முற்பட்டும் தீ மளமளவென பற்றி எரிந்ததால், அவர்களின் முயற்சி தோல்வியுற்றது.
பேருந்தில் இருந்து வெளியேற முடியாமல், 3 குழந்தைகள் உட்பட 25 பயணிகள் உள்ளேயே சிக்கி தவித்தனர்.
வெளியேற வழியின்றி, உயிருக்காக போராடியவர்கள் பேருந்தில் பற்றி எரிந்த தீயில் உடல் கருகி துடிதுடிக்க உயிரிழந்தனர்.
தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வருவதற்குள் இக்கோர சம்பவம் அரங்கேறி முடிந்துவிட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பேருந்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதில் பேருந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில், ஆள் அடையாளம்
தெரியாத அளவிற்கு தீக்கிரையாகி உயிரிழந்தவர்களின்
உடல்களையும் மீட்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
அறிவித்துள்ளார்.
தகவல் அறிந்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு அவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள் ளார். மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதிகாலை நடந்த இந்த கோர விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் அழ்த்தியுள்ளது.