120 தீவுகள் மீது ஒரு அழகிய நகரம்.. பச்சையாக மாறிய நீர் - கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் வெனிஸ்
வரலாற்று சிறப்பு மிகுந்த வெனிஸ் நகரம், போ நதி கடலில் கலக்கும் பகுதியில் 120 சிறிய தீவுகளின் மீது கட்டமைக் கப்பட்டுள்ள அழகிய நகரமாகும். இதில் உள்ள 177 கால்வாய் களை கடக்க 391 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சாலைகளுக்கு பதிலாக கால்வாய்களை கொண்ட இந்நகரில், படகுகள் மூலம் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் பயணம் செய்கின்றனர். கிராண்ட கேனல் எனப்படும் பிரதான கால்வாயில், ஒரு பகுதி நீர், திடீரென பச்சை நிறமாக மாறியுள்ளது, வெனிஸ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ரியால்டோ பாலத்திற்கு அருகே பச்சை நிறத்தில் நீர் மாறியுள்ளதை வெனிஸ் மாநகர காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் சீர்கேடுகளை எதிர்த்து போராடும் குழு ஒன்று, தம் எதிர்ப்பை தெரிவிக்க இதை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள படகுப் போட்டியையொட்டி, விளாயாட்டுத்தனமாக யாராவது இதை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. களிமண் படுகையின் மீது கட்டப்பட்டுள்ள வெனிஸ் நகரம் படிப்படியாக கடலில் மூழ்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு நூறு முறை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் வெனிஸ் நகரம். கடந்த நூறு ஆண்டுகளில் 15 சென்டி மீட்டர் வரை கடலில் மூழ்கியுள்ளது. புவிவெப்பமயமாதலினால் கடல் மட்டம் உயர்வதால், 2100ல் வெனிஸ் நகரம் முழுவதுமாக கடலில் மூழ்கிவிட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, பிரதான வாய்க்காலில் பச்சை நிற சாயத்தை எதாவது ஒரு குழுவினர் கலந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.