18வருஷமாக தீராத 8 கொலை வழக்குகள்.. சுத்தலில் விட்ட அந்த பகீர் கொலைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

x

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்ஜிஆர் நகர் பாரதிதாசன் குடியிருப்பில் சீதாலட்சுமி என்ற 70 வயது மூதாட்டியை கொலை செய்து, நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு நம்மாழ்வார் பேட்டையில் அருணா என்பவரை அவரது காதலன் தினேஷ், தனது வீட்டிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.

2013ஆம் ஆண்டு ஏப்ரலில் பெரம்பூர் அன்பழகன் நகரில் ரயில்வே அதிகாரி கிருஷ்ணகுமாரின் மனைவி சுமதி, 4 பவுன் நகை 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார்.

2011ஆம் ஆண்டு, வடபழனி பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்த பரமேஸ்வரியும், நவம்பர் மாதம் நெசப்பாக்கத்தில் பைனான்சியர் லோகநாதனின் மனைவி ரஞ்சித‌மும் நகைக்காக கொலை செய்யப்பட்டனர்.

2006ஆம் ஆண்டு வேளச்சேரியில், வயதான தம்பதியினரான ஜேக்கப் மற்றும் மோனி ஜாக்கப் ஆகியோர் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

2016 ஆம் ஆண்டு எழும்பூரில் கேரளாவைச் சேர்ந்த சாரதா என்ற 70 வயது மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு கேகே நகரில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரி பரிமளம் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்குகளில் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையினரை புலன் விசாரணை செய்வதிலும், குற்றவாளிகளை பிடிப்பதிலும் ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக கூறுவார்கள்.

ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக 8 கொலை வழக்குகள் முடிக்கப்படாமலும், குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமலும் இருப்பதும் தமிழக போலீசாரின் பெருமைக்கு ஒரு பெரும் கரும்புள்ளியாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்