30 நிமிடத்தில் 66 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (08.06.2023)
நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் இருக்கும் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கன்னியாகுமரி தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை கருணாநிதியின் கால் படாத இடம் இல்லை என்றும், சென்னை மெரினா கடற்கரையில் ஆகஸ்ட் 7-ந் தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பு நடைபெறும்போது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். எம்.பி.க்களின் எண்ணிக்கையை கூட்டப்போவதாகத் தெரிவித்த திருமாவளவன், இந்தி பேசும் மாநிலங்களில் வென்று கனவை நனவாக்கி கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
டி.டி.வி. தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், ஒத்த கருத்துடைய அனைவரும் ஓரணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார். கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது விவகாரத்தில் மௌனம் சாதிக்காமல் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக அரசு மறைமுகமாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் ஜி.கே.வாசன் அப்போது குற்றம் சாட்டினார்.
2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்ச ரூபாயில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழில் பயிற்சி நிலையங்களை சென்னை ஒரகடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய எந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள், மென்பொருட்கள் ஆகியவை நிறுவப்பட்டு தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 28 ஐடிஐ -க்கள் தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளது.