27 நிமிடத்தில் 65 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (09.07.2023)

x

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டும், இலாகாகள் மாற்றப்பட்டும் உள்ளன. அதன்படி, சென்னை மாநகராட்சி துணை ஆணையராக, ஆனந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவின் சிறப்பு அலுவலராக சுப்பையன் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் பகவத் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உயர் கல்வித் துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பத்திரப் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 40 ஆயிரம் ரூபாயாக உயர்கிறது. தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த, சென்னை மாநகராட்சி சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஜூலை 3-வது வாரம் முதல், சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. பயனாளிகளின் விவரங்களை தேர்வு செய்ய சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முகாம்கள் நடத்தபடவுள்ளன.

பொது சிவில் சட்டத்தை, பிரதமர் மோடி துணிச்சலாக செய்ய நினைப்பதாக, நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுசிவில் சட்டம் குறித்து அரசியல் சாசனம் வகுக்கும் போதே அம்பேத்கர் கூறியுள்ளதாகவும், பிரிட்டிஷ்காரர்கள் தூண்டுதலால் இதனை சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்