29 நிமிடத்தில் 64 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (24.05.2023)

x

கோடைக்காலம் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளதாக தேமுதிக பொருளாள‌ர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு முன்பு துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று வந்த பிறகு, இதுவரை என்ன தொழில் தொடங்கப்பட்டுள்ளது எனவும் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்த‌து எனவும் கேள்வி எழுப்பினார்.

மல்யுத்த வீரர் வீராங்கனைகளை தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராடும் நிலைக்கு தள்ளிவிட்டோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சக இந்தியர்களே நம் கவனத்துக்கு உரியவர்கள் யார்? தேசிய விளையாட்டு வீரர்களா? அல்லது குற்ற வரலாற்றைக்கொண்ட அரசியல்வாதிகளா? என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் வரை, மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் இறந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா தலைமையிலான அமர்வில், இன்றைய தினம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவில் பங்கேற்ற பிறகு திருச்சி மாவட்டம் ஒத்தக்கடையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூன் மாதம் திட்டமிட்ட தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், பள்ளி திறப்பில் மாற்றம் இருந்தால் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்