பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து துடி துடித்து இறந்த 6 வயது மாணவி ஸ்ருதி.. 10 ஆண்டுகள் கழித்து வந்த தீர்ப்பால் பெற்றோர் அதிர்ச்சி
தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று சிறுமி ஸ்ருதி மரணம். 2012 ஜூலை 25 ஆம் தேதி பள்ளி சென்றுவிட்டு மாலையில் ஆசையாக வீடு திரும்பிய 6 வயதே ஆன ஸ்ருதி, பள்ளி பேருந்து இருக்கையின் கீழ் இருந்த ஓட்டை வழியாக விழுந்து மரணம் அடைந்தார்.
விபத்தை நேரில் பார்த்த மக்கள் ஆத்திரமடைந்து பேருந்திற்கு தீ வைத்ததால் பேருந்து தீக்கிரையானது.
மகள் வீடு திரும்புவாள் என எதிர்பார்த்திருந்த மாதவன்-ப்ரியா தம்பதியை ஸ்ருதியின் மரணச் செய்தி தூக்கிவாரிப்போட்டது.
தாம்பரம் சேலையூர் சீயோன் பள்ளியில் படித்த ஸ்ருதியின் மாணவி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.
கவனக்குறைவு, அலட்சியத்திற்கு ஒரு உயிர் பலியானால் மட்டும்தான் நடவடிக்கையா? என சமூகத்திற்கும், அரசுக்கும் சாட்டையடியை கொடுத்த துயரச் சம்பவங்களில் ஒன்று ஸ்ருதி மரணம். ஸ்ருதியின் மரணத்தை அடுத்தே பள்ளி பேருந்துகள் ஆய்வு கட்டுப்பாடுகள் அமலானது.
ஸ்ருதி மரணம் தொடர்பாக விசாரணையை தொடங்கிய பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பள்ளியின் தாளாளர் விஜயன், அவரது சகோதரர்கள் ரவி, பால்ராஜ், பேருந்து ஓட்டுநர் சீமான், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், பேருந்து ஓட்டுநர் யோகேஷ் சில்வேரா மற்றும் கிளீனரான 17-வயது சிறுவன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பில் 35 சாட்சிகளிடமும், பள்ளி தரப்பில் 8 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டன.
இறுதியாக வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி காயத்ரி, குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு சிறுமி ஸ்ருதியின் பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தீர்ப்பு விபரம் 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கிறார்கள் வழக்கறிஞர்கள்...
சுருதியின் தந்தை சேது மாதவனிடம் பேசியபோது, தீர்ப்பு பற்றிய முழு விவரங்கள் கிடைத்ததும், வழக்கறிஞருடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.