33 நிமிடத்தில் 59 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (31.05.2023)
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். கடந்த 23-ந்தேதி அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 2024ஆம் ஆண்டு சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார். இதையடுத்து இன்று இரவு சென்னை திரும்பும் முதலமைச்சருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கோவா தினம் சென்னை ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கற்றனர். விழாவில் கோவா மாநிலத்தின், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பேசிய ஆளுநர் ரவி, கோவா மாநிலத்தில் வாழும் மக்கள் பல இடங்களில் உள்ளனர் என்றார். பல மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருவதாகவும் , தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் எனவும் தெரிவித்தார்.
தருமபுரியில் உள்ள அரசு குடோனில் மாயமான 7,000 டன் நெல் மூட்டைகளை மீட்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7ஆயிரம் டன் நெல் மாயமாகி இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். நெல் மூட்டைகள் மாயமானதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதிமுகவில் இருந்து விலகுவதாக, கட்சியின் அவைத் தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி அறிவித்த நிலையில், அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். திமுகவுடன் கூட்டணி வைத்தது துரைசாமிக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்த வைகோ, அவர் விலகியதற்கான காரணங்கள் குறித்து தனக்கு தெரியாது என்று கூறினார். மேலும், துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டுமென கட்சியினர் வலியுறுத்தியதாகவும் வைகோ தெரிவித்தார்..