28 நிமிடத்தில் 57 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (10.06.2023)
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் பற்றியும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. அதேபோல் மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகை, திட்டமிடல் உள்ளிட்டவை குறித்தும் திட்டக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக அணி பங்கேற்காத விவகாரத்தில், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பணியில் மெத்தனமாக செயல்பட்டார் என்றும், கவனக் குறைவாக செயல்பட்டதன் காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாதது தமிழகத்திற்கு தலைகுனிவு என்றும், இதனால் 503 மாணவர்களின் உயர்கல்வி இடஒதுக்கீடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது என்றார். ஏற்கனவே மேகதாது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.