27 நிமிடத்தில் 57 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (11.07.2023)
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். சமீபத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற நிலையில், காவல்துறையில் பல பொறுப்புகளில் அதிகாரிகள் மாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதில், கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார். கடந்த மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில், தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். சிறப்பாக நிகழ்ச்சி நடந்ததையொட்டி, பனையூரில் உள்ள இல்லத்தில் இன்று அனைத்து தொகுதி பொறுப்பாளர்களுடனும் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி பின் போட்டோ ஷூட் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத்தலைவருக்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தான், நாங்கள் கேட்கிறோம் என்று, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆளுநரை மாற்ற வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்..
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிட பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 2.21 ஏக்கரில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் இந்த நினைவிடம், அவரது நினைவு தினமான ஆகஸ்ட் 7 ஆம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தநிலையில் மும்முரமாக நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.