25 நிமிடத்தில் 53 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (13.07.2023)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது.
அமர்நாத் பனிலிங்கம் யாத்திரைக்கு சென்ற தமிழக யாத்ரீகர்கள், பாதுகாப்பாக வந்து கொண்டிருப்பதாக, தெரிவித்துள்ளனர். தந்தி டிவிக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த அவர்கள், தமிழக அரசு சார்பில் யாரும் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை எனவும், வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், ரயில் பயணத்திற்கான டிக்கெட் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என தமிழக யாத்ரிகர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 28 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
டெல்லி அருகே யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி மரம் மீது ஏறி ஒரு தாள் முழுவதும் உயிருக்கு போராடிய இளைஞரை போலீசார் பத்திரமாக மீட்டு படகில் அழைத்து சென்றனர். இதேபோல் மழை வெள்ளத்தில் சிக்கிய மாடு கன்றுகளும் பத்திரமாக மீட்கப்பட்டன.