1 போல்ட் நட்டில் தொங்கிய 50 உயிர்கள்.. "எமன் வாகனமான" பேருந்து - கண் முன் வந்துபோன மொத்த வாழ்க்கை
காரைக்காலில் அரசு பேருந்து சக்கரத்தில் நட்டுகள் கழன்ற நிலையில், 50 பயணிகளுடன் அப்பேருந்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் முறையாக பராமரிக்கபடுவ தில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும், இலவச பயணம் அல்லது குறைந்த கட்டணம் என்பதால் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் முதல் சாய்சாக அரசு பேருந்துகள் இருந்து வருகிறது.
கட்டணத்தால் காம்ப்ரமைஸ் செய்துகொண்டாலும் அரசு பஸ்களில் பயணிக்கும் மக்கள் ஒரு வித பீதியுடனேயே பயணத்தை தொடர்கின்றனர். மக்களின் பீதியை நியாயப்படுத்தியிருக்கிறது பாண்டிச்சேரி அரசு பஸ்ஸில் அரங்கேறிய சம்பவம்.
காரைக்காலில் இருந்து 50 பயணிகளுடன் அம்பகரத்தூர் நோக்கி புதுச்சேரி அரசு பேருந்து புறப்பட்டது. பேச்சும், சிரிப்புமாக கலகலப்பாக இருந்த பயணிகள் மத்தியில் திடீரென பதற்றம் காண தொடங்கியது. ஆம் அதுநாள் வரை இல்லாதபடி பேருந்து ஏதோ ஒரு மாதிரியாக சைடு வாங்கியே செல்வது போன்று தோன்றியது.
பெரும்பாலும் அரசு பேருந்துகள் ஒரு சைடாக சாய்ந்தபடியே செல்லும் என்றாலும் அன்று கொஞ்சம் வித்தியாசம் அதிகமாகவே இருந்தது. பயணிகளுக்கே தெரிந்த விஷயம் டிரைவருக்கு புரியாமல் போகுமா என்ன? அவருக்கும் ஏதோ தவறாக நடப்பது புரிந்தது.
சந்தேகமடைந்த டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தி சோதனை செய்தபோது அதிர்ந்தே போனார். ஆம் அந்த பேருந்தின் முன் சக்கரத்தில், ஒன்று நட்டு இல்லாமலேயே ஓடிக்கொண்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த சக்கரத்தில் பொருத்தப்பட்ட மொத்தமுள்ள 8 நட்டுகளில் 2 மட்டுமே சரியாக பொருத்தப் பட்டிருந்தது. மீதமுள்ள 6 நட்டுகளில் 4 நட்டுகள் சுத்தமாகவே இல்லை, 2 நட்டுகள் லேசாக ஒட்டிக் கொண்டிருந்தது.
இன்னும் சில மீட்டர் தூரம் பேருந்து ஓடியிருந்தாலும் அந்த 2 நட்டுகளும் தெரித்து டயர் தனியாக கழன்று விழுந்து பெரும் விபத்து நிகழ்ந்திருக்க கூடும். சரியான நேரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தலை தப்பியது தம்பிரான் புண்ணயமென, டிரைவரை வாழ்த்திக்கொண்டும் பாண்டிச்சேரி போக்குவரத்துக் கழகத்தை தூற்றிக்கொண்டும் பயணிகள் அங்கிருந்து வேறு பஸ்களில் ஏறி சென்றனர்.
விசாரணையில், போக்குவரத்துக்கழக ஊழியர்கள் முன்பக்க சக்கரத்தை கழற்றி மாட்டிய போது, நட்டுகளை முறையாக பொருத்தாமல் கவனக்குறைவுடன் செயல்பட்டுள் ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.