25 நிமிடத்தில் 48 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (23.07.2023)

x

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்பட 21 இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டில் ராமலிங்கம் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது...


மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான முகாமை தருமபுரியில் நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக்கூடிய திட்டம் மட்டுமல்ல - பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 10 தொழிற்சாலைகள் தொடங்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் களுக்கான சிப் தயாரிக்கும் தொழிற்சாலை, பாக்ஸ்கான் கம்பெனி விரிவாக்கம், எலக்ட்ரானிக் ஆட்டோமொபைல் உள்ளிட்ட பத்து தொழிற்சாலைகள் அடங்கும். இதன் மூலம், 27 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில், 10 தொழிற்சாலைகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் முதியோர் உதவித்தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து, ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முதியோர் உதவித்தொகை உட்பட உயர்த்தப்பட்ட உதவித்தொகைகள் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என, நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்