24 நிமிடத்தில் 48 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (25.06.2023)
4 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றடைந்தார். எகிப்து தலைநகரான கெய்ரோ விமானநிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை, எகிப்து பிரதமர் முஷ்தபா மட்டவுலி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வந்தே மாதரம் என்றும், மோடி மோடி என்றும் முழக்கங்களை எழுப்பினர். பலர் இந்திய திரைப்பட பாடல்களை பாடியும், கலாசார நிகழ்ச்சிகளை வழங்கியும் அவரை வரவேற்றனர்.
காவேரி மருத்துவமனையில் 7 வது தளத்தில் இதயவியல் சிறப்பு சிகிச்சை பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் 4 வது தளத்தில் அறை எண் 435 க்கு மாற்றம் செய்யப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவர் இயற்கையாக சுவாசித்து வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தி.மு.க மூத்த தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரத்தில் கோவை சிறையில் உள்ள பா.ஜ.க. ஆதரவாளர் உமா கார்த்திகேயனை, வேறொரு வழக்கில் சென்னை போலீசார் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த உமா கார்த்திகேயன், டிவிட்டரில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில், சென்னையிலும் உமா கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த உமா கார்த்திகேயனை, சென்னை போலீசார் கைது செய்தனர்.
டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக சைலேந்திர பாபு விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி கடந்த ஓராண்டாக காலியாக உள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் முனியநாதன், தலைவர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இந்நிலையில், இம்மாதம் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் டி.ஜி.பி சைலேந்திர பாபு, டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், ஜூலை ஒன்றாம் தேதி டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திரபாபு பதவியேற்பார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.