45 மொபைல் ஹாஸ்பிடல்,கேஸ் கட்டர்,மோப்ப நாய்.. வல்லரசு நாடுகளே திரும்பி பார்க்கும் மாநிலம்... - 15 மணி நேரத்தில் முடிந்த மீட்பு பணி

x

கோர ரயில் விபத்தில் நேரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒடிசா அரசு எப்படி மீட்பு பணிகளை துரிதப்படுத்தியது என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

ஒடிசா... புயல்... வெள்ளம்... என இயற்கை பேரிடர்களை ஓயாது கண்டு அதனை எதிர்க்கொள்ளும் பேரிடர் மேலாண்மையில் வல்லரசுகளையே திரும்பிப்பார்க்க செய்யும் மாநிலம்...

புயல்கள் ஒடிசாவின் பொருளாதாரத்தை சூரையாடினாலும், மக்கள் உயிரிழப்பை மட்டுப்படுத்தியிருக்கிறது தனது பேரிடர் மீட்பு மேலாண்மையால்...

இப்போது அந்த அனுபவம் ரயில் விபத்து மீட்பு பணிக்கும் உதவியிருக்கிறது. ஒடிசா மாநிலம் பாஹாநாகாவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் விபத்தில் சிக்ககியவுடன், உள்ளூர் மக்கள் விரைந்து வந்து சிதைவுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

அடுத்த 15 நிமிடங்களில் உள்ளூர் போலீசார், தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டதாக விபத்தில் சிக்கியவர்களே சொல்கிறார்கள். அதேவேளையில் தேசிய பேரிடர் மீட்பு படையும் அங்கு அனுப்பப்பட்டது. மீட்பு பணிகளில் சடலங்களும், படுகாயம் அடைந்தவர்களும் மீட்கப்பட அரை மணி நேரத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் அங்கு அணிவகுத்தன. 50 மருத்துவர்கள் அடங்கிய குழுவும் விபத்து நடந்த பகுதியை அடைந்தது.

காயமடைந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கே அரசின் முன்னுரிமை என்றார் முதல்வர் நவின் பாட்நாயக். பாலசோர், கட்டக், கோபால்பூர், புவனேஷ்வரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், எய்ம்ஸ் மருத்துவமனை காயமடைந்தோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டது. காயமடைந்தவர்களுக்கு ரயில் நிலையம் பகுதியில் முதலுதவி கொடுக்கப்பட்டு விரைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு ரத்தம் கொடுக்கவும், காயம் அடைந்தோருக்கு உதவவும் உள்ளூர் மக்கள் குவிந்தது நெகிழச் செய்தது. விபத்து நடந்த பகுதி மீட்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அங்கும் இங்குமாக கேட்ட சத்தத்தை அடையாளம் கண்டு சிக்கியவர்களை மீட்பு குழுவினர் மீட்டனர்...

மீட்பு படையினருக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் மோப்ப நாய்கள் உதவியது. சிதைவுகளுக்கு சென்று யாரும் உயிருடன் இருக்கிறார்களா என மீட்பு குழுவுக்கு அடையாளம் காட்டியது...

மூன்று ரயில்கள் சிதைவுகளுக்கு கீழ் சிக்கியவர்களை எல்லாம் கேஸ் கட்டர்களை கொண்டு இரும்புகளை வெட்டி எடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை மீட்டது.

உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதிகள் செய்யப்பட்டது. அந்த மார்க்கமாக செல்லவிருந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்படவே, அங்கிருக்கும் பணிகளுக்கும் உதவ பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.

விடிய விடிய மீட்பு பணிகள் நடந்தது. மீட்பு படைகள், காவல்துறையை சேர்ந்த ஆயிரத்து 200 பேர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராணுவம், விமானப்படையும் உதவியது. சுமார் 15 மணி நேர போராட்டத்தில் ரயில்களிலிருந்த வர்கள் மீட்கப்பட்டனர். சிதைவுகள் எல்லாம் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. சிதைவு பெட்டிகள் எல்லாம் தண்ட வாளத்தைவிட்டு அகற்றப்பட்டு, தண்டவாளத்தை தயார் செய்யும் பணிகள் தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்