19 நிமிடத்தில் 42 செய்திகள்... மாலை தந்தி செய்திகள் | Thanthi Evening News | Speed News (09.05.2023)
பிளஸ்டூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சந்தித்து வாழ்த்து பெற்றார். திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினி, அனைத்து பாடங்களிலும் சதமடித்து கவனம் ஈர்த்த நிலையில், பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மாணவியின் உயர்கல்விக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்.
அரசின் உதவிகளால், தன்னால் நன்றாக படிக்க முடிந்ததாக, பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவி நந்தினி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த வாழ்வில் கிடைத்த பாக்கியம் என நெகிழ்ந்த அவர், முதலமைச்சர் பரிசுப்பொருட்கள் வழங்கி வாழ்த்தியதாக உற்சாகமடைந்தார்.
மணிப்பூரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த 5 மாணவர்கள் இன்றிரவு தாயகம் திரும்புகின்றனர். விருதுநகர், தூத்துக்குடி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 மாணவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அசாதாரண சூழலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் பி.எப்.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி சோதனை நடத்தப்பட்டது. இதில் திருவொற்றியூரில் பி.எப்.ஐ அமைப்பின் மாநில நிர்வாகியாக இருந்த அப்துல் ரசாகை போலீசார் கைது செய்தனர். இதேபோல திண்டுக்கல்லில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.