20 நிமிடத்தில் 38 செய்திகள்.. மாலை தந்தி செய்திகள்..!
நிதி ஆயோக்கின் 8-வது ஆட்சிக்குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள புதிய மாநாட்டு மையத்தில், "மேம்பட்ட இந்தியா 2047: ஒன்றுபட்ட இந்தியாவின் பங்கு" என்ற தலைப்பில் இந்தக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தை முதலமைச்சர்கள் மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், சந்திரசேகர ராவ், நிதிஷ்குமார் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர்.
புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்க, தனி விமானம் மூலம் திருவாவடுதுறை ஆதீனம் டெல்லி புறப்பட்டு சென்றார். . திருவாவடுதுறை ஆதீனம் 24வது குரு மகா சந்நிதானம் நாளை டெல்லியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதற்காக மத்திய அரசு ஏற்பாடு செய்த தனி விமானத்தில் இன்று அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா மாகாணத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திடவும் கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக, இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் சிசிடிவி கேமராக்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி 3 மருத்துவக் கல்லூரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.