16 நிமிடத்தில் 36 செய்திகள்...காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (07.07.2023)
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ள நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். 1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி காப்பாற்ற நினைப்பதாகவும், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் விசாரணைக்கு, காலதாமதம் செய்யாமல் ஆளுநர் இசைவு ஆணை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆளுநரின் விளக்க கடிதத்திற்கு பதிலளித்துள்ள அவர், ஊழல் வழக்கு விசாரணை கோப்புகளை பெற்றுக் கொண்டு, தற்போது 2 கோப்புகளும் கிடைக்கவில்லை என கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்றார். ஆளுநர் ரவி சட்டரீதியான பணிகளை விட்டுவிட்டு, அரசியல் கட்சி பணிகளை மட்டுமே செய்து கொண்டிருக்கிறாரோ என்றும் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒ.பி.ரவீந்திரநாத் எம்.பி.வெற்றி செல்லாது என்ற தீர்ப்பில், மேல்முறையீடும் செய்யலாம் என, தெரிவித்திருப்பதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்ததாக ஒபி ரவீந்திரநாத் கூறிய நிலையில், வட்டி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும் மறைத்ததால், வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாணி ஃபேப்ரிக்ஸ்' நிறுவனத்தில் இயக்குநராக இருந்தபோது வாங்கிய சம்பளம், அந்த நிறுவனத்தில் தனக்கு 16 ஆயிரம் பங்குகள் இருந்ததையும் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என உயர்நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.