16 நிமிடத்தில் 36 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (17.06.2023)
செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருவார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் பரிந்துரைத்தால் பதவி பிரமாணம் செய்து வைப்பது தான் ஆளுரின் வேலை, நிராகரிப்பது அல்ல என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இயங்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டவர் தான் எனவும் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மூன்றும் பாஜகவின் திரிசூலமாக உள்ளதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார். கோவையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பாஜக, இந்துத்துவ அமைப்பினரிடம் இருக்கும் திரிசூலம், சமூகநீதி மண்ணில் வேலை செய்யாது என்றார்
கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கி விட்டால் தாமரை மலரும் என பாஜகவினர் கருதுவதாக திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் சிறந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என குறிப்பிட்ட அவர், கருணாநிதி நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறும்போது மோடியும், அமித்ஷாவும் இந்தியாவில் இருக்க மாட்டார்கள் என்றார்.