17 நிமிடத்தில் 35 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (20.07.2023)

x

பெரும் அரசியல் பரபரப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரை சமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அரசின் சார்பில் கொண்டு வரப்பட உள்ள மசோதாக்கள், எதிர்க்கட்சிகள் எழுப்ப இருக்கும் முக்கிய பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.


டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக சார்பில், திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள், மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம், தமிழக ஆளுநரை திரும்பப் பெறுவது, மணிப்பூர் கலவரம், விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கு நோட்டீஸ் அளித்துள்ளதாக கூறினார்கள்.


நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், வியூகங்கள் வகுப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், நடைபெறும் கூட்டத்தில், கூட்டத்தொடருக்கான செயல் திட்டங்கள் மற்றும் வியூகங்கள் வகுப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவைப் பிடிக்காவிட்டால் 'பாகிஸ்தானுக்குப் போ' என மதவாத சிந்தனையுடன் பேசிய பா.ஜ.க.வினர் இப்போது எந்த நாட்டுக்கு விசா வாங்கப் போகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்திய ஒன்றியம் முழுவதும் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றும், இந்திய மாநிலங்கள் அனைத்தும் பாரபட்சமின்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியினை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற சொல் இப்போது பாஜகவுக்கு பிடிக்காத சொல்லாகி விட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்..



Next Story

மேலும் செய்திகள்