15 நிமிடத்தில் 34 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (20.05.2023)
தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங் மற்றும் வன்னியபெருமாள் ஆகியோருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ராஜீவ் குமார் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை சிவில் சப்ளை சிஐடி பிரிவு ஏடிஜிபி அருண், ஆவடி காவல் ஆணையராகவும், சென்னை பூக்கடை துணை ஆணையராக ஸ்ரேயா குப்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக எம்.பி திருச்சி சிவாவின் மருமகன் வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார் உட்பட 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் ஓட்டுநரை கொடூரமாக தாக்கியதாக அவரதுமனைவி கடந்த 13ஆம் தேதி, திருச்சி அமர்வு நீதிமன்ற காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரணை நடத்தி, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா மருமகன் வழக்கறிஞர் முத்துகுமார் மற்றும் மூன்று பேர் மீது கொலை முயற்சி உட்பட ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ரவியை நாளை நேரில் சந்தித்து 2 மனுக்களைத் தர உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணி மோசடி புகார் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் ஆளுநர் வலியுறுத்த கோரி மனு அளிக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பதவிக்காகவோ பொறுப்பிற்காகவோ தமது கொள்கையும் தத்துவமும் என்றும் மாறாது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், தத்துவமும், கொள்கையும் தான் தமது அடையாளம் என்றார்.