10 நிமிடத்தில் 32 செய்திகள்.. | மாலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News |Thanthi Short News (05.05.2023)
திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம், கிருஷ்ணகிரி, உட்பட 15 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 7ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, 8ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மகளிருக்கு நகர பேருந்துகளில் இலவச கட்டணம் என அறிவித்து விட்டு, பேருந்து சேவையை குறைப்பதா? எனஎதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். மகளிர் இலவச பயணத்தால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம் என தென்காசி ஆட்சியர் பேசியதையும் சுட்டிக்காட்டிய ஈபிஎஸ், பேருந்து சேவையை தனியாருக்கு தாரைவார்க்க அரசு முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் பத்மஸ்ரீ திரு.சிவந்தி ஆதித்தனாரின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் திரை இசையில் தெய்வப்பாடல்கள் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாடகர்கள் வினையா, சுசித்ரா, சாய் விக்னேஷ், சந்தோஷ் சுப்பிரமணியன், மற்றும் கீ போர்டு பிரான்சிஸ் சேவியர், வயலின் ரங்கப்பிரியா, புல்லாங்குழல் வெங்கட நாராயணன், தபலா வெங்கட் ஆகியோரின் இசை நிகழ்ச்சி முதல் முறையாக நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மண்ணாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன், திருப்பரம் குன்றத்தில் நீ சிரித்தால் உள்ளி பல்வேறு பக்தி பாடல்கள் பாடிப்பட்டது.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஆதிதேவி மாரியம்மன்கோயில் 53ஆம் ஆண்டு திருவிழாவில், இறந்தவர் போல் படுத்துக் கொண்டு பக்தர்கள் பாடை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வாயில் அலகு குத்தி காவடிகள் எடுத்தும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால்குடங்கள் எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.