14 நிமிடத்தில் 31 செய்திகள் | மாலை தந்தி எக்ஸ்பிரஸ்
விமான டிக்கெட் முன் பதிவு செய்பவர்களுக்கு தக்காளி இலவசம் என மதுரையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகே இயங்கி வரும் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம், ஜூலை 11,12 ஆகிய இரு நாட்களுக்கு உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 1 கிலோ தக்காளி வழங்கப்படும் என கூறியுள்ளது. வெளிநாட்டு டிக்கெட்டுக்கு ஒன்றரை கிலோ தக்காளி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில், முதியவர் ஒருவரை, 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தரதரவென இழுத்து வந்து சாலையோரத்தில் நின்றிருந்த 2 கார்களின் இடைப்பட்ட பகுதியில் வைத்து, கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், எதுவும் நடக்காததுபோல், அந்த நபர் அங்கிருந்து கிளம்பினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில்,உயிரிழந்த நபர் விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என தெரியவந்தது. கொலை செய்த நபர், அவரது மகன் கடற்கன்னி என்பதும் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொலை செய்து விட்டு கேரளா தப்பியோடிய கடற்கன்னியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்து தகராறில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியவரை கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,'வெயிலின் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்புகள் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டதாக கூறியுள்ளார். வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரும் பொழுது அதற்கான ஏற்பாடுகளை செய்த பின்னர் உணவகத்தை திறக்கும் படியும் அறிவுரை கூறப்பட்டதாக ஆட்சியர் குமரவேல் கூறியுள்ளார். பின்னர் தனியார் உணவக நிர்வாகம் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக அளித்த கடிதத்தின் அடிப்படையில் அன்றைய தினம் மாலையே உணவகம் திறக்கப்பட்டது என்றும் ஆட்சியர் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார்.