30,000 மாணவர்கள் தகவல் திருட்டு.. கண்ணூர் பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி சம்பவம்
கண்ணூர் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து சுமார் 30,000க்கும் மேற்பட்ட மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கண்ணூர் பல்கலைக் கழகத்தில் பயிலும் சுமார் 30 ஆயிரம் மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டார்க் வெப்பில் ஹேக்கர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இதனை கொச்சியில் உள்ள தனியார் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி கண்டுபிடித்துள்ளது.
பல்கலைக்கழக இணையதளத்தில் ஏற்பட்ட பிழை காரணமாக இந்த தகவல் திருடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. ஹேக்கர்கள் அதை தங்களின் வேறு வெப் சேட்டில் பதிவிட்டுள்ளனர்.
இதில் மாணவர்களின் ஆதார் எண்கள், புகைப்படங்கள், தொடர்பு எண்கள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது வழங்கப்பட்ட முழுத் தகவல்களும் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கண்ணூர் பல்கலைக்கழகம் சார்பில் சைபர் செல் மற்றும் நகர போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.