ரூ.30 லட்சம் மோசடி தாய் மகள் கைது - போலி காசோலை கொடுத்து மோசடி
சென்னை தாம்பரம் அருகே மகளின் திருமணத்துக்காக வாங்கிய 30 லட்சம் ரூபாய் கடனுக்கு போலி காசோலை கொடுத்து மோசடி செய்த தாயும், மகளும் கைது செய்யப்பட்டனர்.
சேலையூர் இந்திரா நகரைச் சேர்ந்த ரெஜிகுமார் என்பவர், கடந்த ஆண்டு தனது மகள் ஜூலியின் திருமணத்துக்காக, அதே பகுதியை சேர்ந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோரிடம் 30 லட்ச ரூபாய் கடன் வாங்கினார்.
திருமணம் முடிந்த பிறகு கடன் கொடுத்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த காசோலை போலியானது எனத் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் உள்ளிட்டோர், செக்மோசடி கும்பல் என அந்தப் பகுதியில் நோட்டீஸ் ஒட்டினார்கள்.
இதுதொடர்பாக ரெஜிகுமார் அளித்த புகாரின்பேரில் மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அவர்கள், கிழக்கு தாம்பரத்தில் கடை வீதிக்கு வந்திருந்த ரெஜிகுமாரை வழிமறித்து கடனை திருப்பிக் கேட்டு தகராறு செய்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரித்ததில் ரெஜிகுமாரும் ஜூலியும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.