IT ஊழியர்களுக்கு ஷாக் தரும் '2023'...வேலையை விட்டு தூக்கும் பிரபல நிறுவனங்கள் - "இது மேலும் தொடரலாம்..!"
ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்த ஆண்டு தொடக்கமே ஐடி உள்ளிட்ட டெக் ஊழியர்களுக்கு அதிர்ச்சிகரமாக அமைந்திருப்பது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.
கடந்த ஆண்டு இறுதியில் தான்... 13 ஆண்டுகளில் மிக மோசமான பொருளாதார மந்தநிலையை உலக நாடுகள் சந்தித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு... 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் எப்படி இருக்கும்? என ஐடி ஊழியர்களை எச்சரித்திருந்தது... அமெரிக்காவின் பொருளாதார ஆய்வு நிறுவனமான கிரே அண்ட் கிறிஸ்துமஸ்.
2008 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்ற ஆண்டு தான் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை அதிகம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2023 ஆம் ஆண்டு தொடக்கமே... ஐடி ஊழியர்களை மிரள வைத்துள்ளது.
அமேசான்... மெட்டா...பேஸ்புக்... ட்விட்டர், மைக்ரோசாப்ட... சிஸ்கோ... ஓலா... ஓயோ.. ஷேர்சார்ட் போன்ற நிறுவனங்கள்... ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்து தடாலடியாக தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி அதிரடி காட்டி வந்தன.
இன்னொரு புறம் கூகுள், பிப்சிகோ, நெட்பிளிக்ஸ், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானது.
இப்படி பல டெக் நிறுவனங்களும் தடாலடியாக பல அதிரடி முடிவுகளை அறிவிக்க காரணம்... எதிர்பார்த்த அளவில் லாபம் கிடைக்காததால் தான் என்று கூறப்பட்டது.
தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் வல்லரசான அமெரிக்கா கூட இதற்கு விதிவிலக்கல்ல...
இந்தியாவில் உள்ள அமேசான் நிறுவனங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் பணிபுரிந்து வரும் நிலையில், 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது, அமேசான். இதன் மூலம் ஆயிரம் இந்தியர்கள் வேலையை இழக்க நேரிடும்.
ஆன்லைன் டெலிவரி நிறுவனமான டன்சோவும் மூன்று சதவீத ஊழியர்களை வேலையை விட்டு தூக்கியுள்ளது.
தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் பத்தாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 600 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2022ல் ஆட்குறைப்பு நடவடிக்கையை சுமார் ஆயிரம் தொழில்நுட்ப நிறுவனங்கள் கையில் எடுத்த நிலையில், உலகளவில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஊழியர்கள் வேலையை இழந்தனர்.
இந்நிலையில், ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 91 நிறுவனங்கள் சுமார் 24 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் உலகளவில் 50 ஆயிரம் பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அதிகளவில் ஐடி ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் ஆண்டு தொடக்கத்திலேயே ஐடி உள்ளிட்ட டெக் ஊழியர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.