"குலுக்கலில் 200 பேர் தேர்வு... ரூ. 2 கோடிக்கு பரிசு பொருட்கள்?" - ’ரஜினிகாந்த் பவுண்டேஷன்’ பெயரில் மெகா மோசடி
நடிகர் ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் போலி கணக்கு தொடங்கி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து வரும் மோசடி கும்பல் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
சென்னை கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் மெயின்ரோடு பகுதியில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையில் சிவராமகிருஷ்ணன் என்பவர் அறங்காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில், நடிகர் ரஜினிகாந்த்திற்கு சொந்தமாக ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், இந்த அறக்கட்டளை மூலம் விளிம்பு நிலையில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவசமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி அளிப்பது, கல்வி உதவி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்களின் டிவிட்டர் பக்கம் மற்றும் அதிகாரப்பூர்வ செல்போன் எண்ணை சமர்ப்பித்த அவர், தங்களது அலுவலகம் இருக்கும் கோடம்பாக்கம் பகுதி அங்கீகரிக்கப்பட்ட முகவரி எனவும் குறிப்பிட்டுள்ளதுடன், இந்த அறக்கட்டளையை வழக்கறிஞர் எம்.சத்திய குமார் என்பவர் மேற்பார்வை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அடையாளம் தெரியாத சிலர், 2 செல்போன் எண்கள் மூலம் சமூக வலைதளத்தில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி கணக்கு தொடங்கியுள்ளனர். அந்ததொலைபேசி எண் மூலம் 200 நபர்களை அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வு செய்து, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்குவதாக குறிப்பிட்டு? பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து வரும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அந்தப் புகாரில் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனால் நடிகர் ரஜினிகாந்த் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், போலியாக அறக்கட்டளை தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் புகாரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.