1,500 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் - தீபத்தால் ஜொலி ஜொலித்த கோயில்கள்
முருகப் பெருமானின் ஏழாம் படை வீடு என பக்தர்களார் கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை உடன் தங்கரதத்தில் வலம் வந்தார். திரளான பக்தர்களும், "மருதமலை முருகனுக்கு அரோகரா" என முழக்கமிட்டதோடு, மகாதீபத்தை கண்டு களித்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில்,117 படிகளை கொண்ட மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பக்தர்கள், கார்த்திகை விரதம் இருந்து, தீபத்தை தரிசித்த பிறகு, தங்களது விரதத்தை முடித்துக் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, செஞ்சி கோட்டையின் மலை உச்சியில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, 600 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 30 ஆண்டுகளாக இந்த கோட்டையில் மகா தீபம் ஏற்றும் நிலையில், பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் அகல் விளக்குகள் ஏற்றி அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து போளூரில், பனை மரத்தில் உள்ள பனை பூக்களை எரித்து, அவற்றை முறையாக பதப்படுத்தி, மரத்தூள், கறித் துண்டுகளைக் கொண்டு துணியால் சுற்றி, மாவலிகள் செய்து விவசாயிகள் விற்பனை செய்தனர். பாரம்பரிய விளையாட்டான மாவலியை வாங்கி, அதை சிறுவர், சிறுமியர் சுற்றி விளையாடி மகிழ்ந்தனர்.