14 ஆண்டு தலைமறைவு வாழ்க்கை.. துப்பாக மாறிய மகனின் வங்கி கணக்கு - தூசி தட்டி பிடித்த போலீஸ்
சென்னை சாலிகிராமம் தசரபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி என்ற சசிகுமார். கடந்த 1994 ஆம் ஆண்டு உறவினரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட சசிகுமார், கடந்த 2009 ஆம் ஆண்டு, மூன்று நாள் பரோலில், சிறையில் இருந்து வெளிவந்தபோது, தலைமறைவானார். 14 ஆண்டுகள் கழித்து, இந்த வழக்கை தூசி தட்டிய சென்னை விருகம்பாக்கம் போலீசார், சசிகுமாரின் சொந்தங்களை, தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில், சசிகுமாரின் மகனுக்கு ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணம் வருவதைக் கண்டறிந்த போலீசாருக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அந்த வங்கி எண் மற்றும் அதில் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணை வைத்து, விசாரணை நடத்தியபோது, மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது மகனுக்கு சசிகுமார் பணம் அனுப்புவதை போலீசார் உறுதிப்படுத்தினர். இந்த நிலையில், செல்போன் எண் மூலம், சசிகுமாரின் மறைவிடத்தைக் கண்டறிந்த போலீசார், அவரைக் கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.