இந்தியாவை துரத்தும் 10 ஆண்டு சாபம்.. விமோசனம் கொடுக்குமா சேப்பாக்கம்? - CSK ராசி அடித்தால் சாத்தியமே..!
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ஐசிசி 50 ஓவர் ஆடவர் உலகக்கோப்பை அக்டோபர் 5ம் தேதி ஆரம்பமாகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
50 ஓவர் உலகக்கோப்பை.... 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கிரிக்கெட் திருவிழா... ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான நிகழ்வு... அதிர்ச்சிகளுக்கும் ஆச்சர்யங்களுக்கும் குறைவிருக்காது. எதிர்பாரா நிகழ்வுகளையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.. 12 சீசன்களைக் கடந்து 13வது சீசன் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில், 10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி தற்போது வெளியிட்டு உள்ளது.
இதன்படி, அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன.
இந்தியா, தங்களது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளது.
இதன்பிறகு, அக்டோபர் 11ம் தேதி ஆப்கானிஸ்தானுடன் டெல்லியில் இந்தியா மோதுகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி, அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
அக்டோபர் 19ம் தேதி வங்கதேசத்துடனும், அக்டோபர் 22ம் தேதி நியூசிலாந்துடனும், அக்டோபர் 29ம் தேதி இங்கிலாந்துடனும் இந்தியா மோத உள்ளது.
நவம்பர் 2ம் தேதி 2வது குவாலிஃபயர் அணியுடனும், நவம்பர் 5ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், நவம்பர் 11ம் தேதி முதலாவது குவாலிஃபயர் அணியுடனும் இந்தியா மோதவுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெற உள்ளன, அக்டோபர் 8ம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா, அக்டோபர் 14ம் தேதி நியூசிலாந்து வங்கதேசம், அக்டோபர் 18ம் தேதி நியூசிலாந்து ஆப்கானிஸ்தான், அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், அக்டோபர் 27ம் தேதி பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா சேப்பாக்கத்தில் மோத உள்ளன.
நவம்பர் 15ம் தேதி மும்பையில் முதல் அரையிறுதி போட்டியும், நவம்பர் 16ம் தேதி கொல்கத்தாவில் 2வது அரையிறுதி போட்டியும் நடைபெற உள்ளது.
நவம்பர் 19ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், சுமார் ஒன்றரை மாத காலத்துக்கு உலகக்கோப்பை தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.