"குழந்தை பிறந்ததும் இறந்த கர்ப்பிணி உடலுக்கு ICUல் சிசிக்சை..?" - யாருக்கும் தெரியாமல் Mortuary கொண்டு சென்று... அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன..?
அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தை பிறந்ததும் உயிரிழந்த நிலையில், பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டையை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி இந்திரா தேவி, பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் தாய் இந்திரா தேவி உயிரிழந்துள்ளார். இத்தகவலை மருத்துவர்களோ, செவிலியர்களோ உறவினர்களுக்குத் தெரிவிக்காமல், ஐ சி யூ வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக கூறியதாகத் தெரிகிறது. இந்திரா தேவியின் தாயார் உள்ளே சென்று பார்த்த போது மகளின் நாக்கு வெளியில் தள்ளி, ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை அளிப்பதைப் போல் காட்டிக் கொண்டதாகத் தெரிகிறது. மேலும் எவ்வித அறிவிப்புமின்றி இறந்த இந்திரா தேவி பிணவறைக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு சந்தேகம் அடைந்த தாய், உறவினர்களிடம் தெரிவிக்கவே, ஆத்திரத்தில் அவர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல உத்தரவிடவே அவர்கள் மறுத்ததால் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர்.