அரசியலில் இருந்து விலகுவதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு - கர்நாடக பாஜகவில் தொடரும் பரபரப்பு
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமோகா தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ள ஈஸ்வரப்பா, ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் சிக்கி கடந்த வருடம் தனது அமைச்சர் பதவியை இழந்தார். இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் எடியூரப்பா, ஈஸ்வரப்பா போன்ற மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என பாஜக வட்டாரங்களில் தகவல் வெளியானது. இதனால், பாஜக மூத்த தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஈஸ்வரப்பா தற்போது அறிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, தனது பெயரை எந்த தொகுதிக்கும் பரிந்துரைக்க வேண்டாம் என்றும் கட்சி நிர்வாகிகளிடம் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.