பாஜகவின் 'ஆயுதம்' பாஜகவுக்கே எதிரானது.. “1 விக்கெட்.. 25 தொகுதிகள் காலி?“ - ஷாக் கொடுக்கும் கர்நாடகா

x

கர்நாடகாவில் பாஜகவுக்கு ஷாக்குக்கு மேல் ஷாக்காக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியிலிருந்து விலகியதோடு, காங்கிரஸ் கட்சியிலும் இணைந்துள்ளார். இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் சூழலில் ஷெட்டர் விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை இப்போது பார்க்கலாம்..

கர்நாடக தேர்தலில் வேட்பாளர்களை அறிவித்த பாஜக பல மூத்த தலைவர்களை கழற்றி விட்டுள்ளது. அதில் முக்கியமான தலைவர்களில் ஒருவர்தான் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.

ஏபிவிபி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் ஜெகதீஷ் ஷெட்டர். 1994 ஆம் ஆண்டு ஹூப்ளி புறநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். 2004 வரையில் அங்கு போட்டியிட்டு வென்றவர் 2008-ல் இருந்து 2018 வரையில் ஹூப்ளி -தார்வாட் மத்திய தொகுதியில் வென்றார். பாஜக கட்சியில் மாநில தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், 2012 முதல் 2013 வரையில் கர்நாடக முதல்வராக பணியாற்றினார்.

சித்தராமையா அரசில் 2014 தொடங்கி 2018 வரையில் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார்.

2019-ல் எடியூரப்பா அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவருக்கு, பொம்மை அமைச்சரவையில் பதவி வழங்கப்படவில்லை. ஷெட்டரும், எடியூரப்பா போன்று பாஜக செல்வாக்கு செலுத்தும் லிங்காயத்து சமூகத்தை சார்ந்தவர்.

இதனையடுத்து தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டிய ஜெகதீஷ் ஷெட்டரிடம், சீட் இல்லை என்று பாஜக மேலிடம் கூறியிருக்கிறது. புதியவர்களுக்கு வழிவிடுமாறு கட்சி மேலிடம் அவரை கேட்டுக்கொண்டதாக தெரியவந்தது. கட்சி கோரிக்கையை நிராகரித்த ஜெகதீஷ் ஷெட்டர், தேர்தலில் போட்டியிடுவது உறுதியென டெல்லி சென்று நட்டாவை சந்தித்தார்.

கடைசியாக ஒருமுறை போட்டியிட கேட்டுக்கொண்டதாக ஷெட்டர் கூறிய நிலையில், அவருக்கு சீட் கிடைக்க 99 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார் எடியூரப்பா... ஷெட்டருக்கு இடமளிக்க வேண்டும் என பிற நிர்வாகிகளும் கூறிய நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஆளுநர் பதவி, மாநிலங்களவை எம்.பி. பதவி அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு சீட் தருவதாகவும் கட்சி தலைமை பேசியதாகவும், அதை எல்லாம் ஏற்க ஷெட்டர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது ஆதரவாளர்கள் ஷெட்டருக்கு சீட் வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி போராட்டமும் நடத்தினர்...

ஏற்கனவே ஹூப்ளி பாஜகவில் ஷெட்டருக்கும் அவரது போட்டியாளர்கள் பிரகலாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே அதிகார போட்டியிருப்பதாக புகைந்தது. இந்த சூழலில், தன்னை பகைத்தால் 25 தொகுதிகளில் தோல்விதான் என பாஜகவை எச்சரித்திருந்த ஷெட்டர், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே பாஜகவை சேர்ந்த லிங்காயத்து தலைவர் லட்சுமண் சவதி சீட் கிடைக்காததால் காங்கிரசுக்கு அணி தாவிய நிலையில், ஜெகதீஷ் ஷெட்டரும் விலகியிருப்பது வாக்கை பிரித்தால் பாஜகவுக்கு பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்