'நந்தினி vs அமுல்' விவகாரத்தால் கலங்கும் பாஜக.. அசராமல் அடித்து ஆடும் அண்ணாமலை
கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலையை மங்கச் செய்ய, மோடி அலை என தீவிரமாக பிரசாரம் செய்கிறது பாஜக...
மறுபுறம் கிடைக்கும் வாய்ப்பை தனக்கு சாதகமாக்க காய் நகர்த்துகிறது காங்கிரஸ்...அப்படி அக்கட்சிக்கு கிடைத்த அரிய வாய்ப்பு தான் குஜராத் அரசின் அமுல் வெளியிட்ட ட்விட்டர் அறிவிப்பு...
ஆம், பெங்களூருவில் ஆன்-லைன் வாயிலாக பால், தயிர் விற்கப்போவதாக அறிவித்தது அமுல்... இது கர்நாடக அரசியல் களத்தை அல்லல்படச் செய்கிறது.
அமுல் வருகை கர்நாடக அரசின் கூட்டறவு பால் நிறுவனமான நந்தினியின் வளர்ச்சியை அழிக்கும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன...
களத்தில் குஜராத்தின் அமுலா...? கர்நாடகாவின் நந்தினியா...? என அனல் தெறிக்கிறது. இதில் கன்னடர் பெருமையை பாஜக திருட முயற்சிக்கிறது என்ற கோஷம் ஹைலைட்...
ஏற்கனவே கன்னடர்களின் வங்கி, துறைமுகங்கள், விமான நிலையங்களை திருடிவிட்டீர்கள்... இப்போது நந்தினியை திருட முயற்சிக்கிறீர்கள் என பிரதமர் மோடியை விமர்சனம் செய்திருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா...
இதன் பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சும் மையமாக இருக்கிறது. கர்நாடகாவில் 3 ஆண்டு களில் ஒவ்வொரு கிராமத்திலும் முதன்மை பால் பண்ணை களை அமைக்க அமுலும், நந்தினியும் இணைந்து செயல் படும் என டிசம்பரில் அமித்ஷா பேசியது எதிர்ப்பை சம்பாதித்தது. இப்போது அமுல் அறிவிப்பு கர்நாடகா அரசியல் களத்தில் நெருப்பை பற்ற வைத்திருக்கிறது.
கன்னட விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவு என கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்... பெங்களூரு ஓட்டல்கள் தரப்பில், நந்தினிக்கே தங்கள் ஆதரவு என தெரிவித்திருக்கிறார்கள். நந்தினியை காப்பாற்றுவோம் என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய, அமுல் வருவதால் நந்தினிக்கு எந்த பாதிப்பு இல்லை என்கிறது பாஜக.. அமுல் வரட்டும்; நந்தினியும் வாழட்டும் என்கிறது பாஜக.
2017 ஆம் ஆண்டு சித்தரமையா முதல்வராக இருந்த போதே அமுல் கர்நாடகாவிற்கு வந்துவிட்டது என கூறியிருக்கும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலை, 2014 ஆம் ஆண்டு நந்தினி தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது... இதில் ஏன் இரட்டை நிலைபாடு என கேள்வியை எழுப்பியிருக்கிறார்...
இப்படியாக பால் அரசியலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பொங்க, இது தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நிச்சயமாக இது பாஜகவுக்கு சவாலாகவே அமையும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்...