🔴LIVE : முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சீமான் பங்கேற்பு

Update: 2023-01-31 05:59 GMT

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய வங்கக்கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பொதுப்பணித்துறை சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் ரூ.81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.

இந்த சிலை அமைந்துள்ள பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும். ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பேனா சிலைக்கு ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என பெயரிடப்பட்டுள்ளது

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரிக்க தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதி வழங்கியிருந்தது.

பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த மத்திய சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு அறிவுறுத்திய நிலையில் சின்னம் அமைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் தங்களது தரப்பு கருத்தை முன்வைக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டுள்ளார் .


பேனா நினைவு சின்னம் - எதிர்ப்பும் ஆதரவும்

கருணாநிதி நினைவாக அமைக்கப்படவுள்ள பேனா நினைவு சின்ன கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும் சலசலப்பு.

நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பும் ஆதரவுமாக பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

முதலில் நினைவு மண்டபம் என்று சொல்லி விட்டு பிறகு பேனா நினைவு சின்னம் அறிவிப்பை 110 விதியின்கீழ் அறிவித்தார்கள். இதிலேயே முரண்பாடு உள்ளது - ஆம் ஆத்மி கட்சி

கடற்கரைக்கும் நினைவு சின்னத்துக்கும் இடையிலான 350 மீட்டர் பாலம் வீணை போன்ற வடிவில் அமைக்கப்படும் என்கிறார்கள். தமிழுக்கு முக்கியத்துவம் என்று சொல்லி விட்டு கர்னாடக இசையை நினைவு படுத்தும் வீனை எதற்கு? - ஆம் ஆத்மி

தமிழ் ஆங்கிலத்தில் மட்டும் நினைவு சின்னம் பற்றிய வர்ணனை போதுமானது. ஆனால் இந்தியையும் அதில் சேர்த்துள்ளார்கள். இது யாரை திருப்தி படுத்த? தமிழ் மொழிக்கான ஆட்சி என்று சொல்லி இந்திக்கு ஏன் முக்கியத்தும்? - ஆம் ஆத்மி

கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பது அவசியம் அதை வரவேற்கிறோம். ஆனால் அதை ஏன் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி கடலில் அமைக்க வேண்டும் - சட்ட பஞ்சாயத்து இயக்கம்

நினைவு சின்னம் அமைக்க வேறு இடங்களையும் தேர்வு செய்யலாம் என மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் சொல்லியுள்ளது. வேறு இடங்களை பரிசீலனை செய்யாதது ஏன்? சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

கூவம் நதி கடலில் கடக்கும் இடத்துக்கு அருகில் நினைவுச் சின்னம் அமைப்பதால் அங்கிருக்கும் பல்லுயிர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் - சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

நினைவுச் சின்னத்துக்கு எதிரில் கல்வி நிறுவனமான சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளது. கட்டுமான பணிகளின் போது காற்று மாசு, ஒலி மாசு ஒளி மாசு பெரும் அளவில் ஏற்படும். இது சுற்றுச் சூழல் விதிகளுக்கு முற்றிலும் முரணானது - சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

மாசு கட்டுப்பாட்டு வாரியம் நினைவுச் சின்னத்துக்கு அனுமதி வழங்காவிட்டால் என் உயிரை மாய்த்து அந்த அனுமதிக்கு வழி ஏற்படுத்துவேன் - நொச்சிக்குப்பம் பெருமாள்

தமிழனுக்கு நினைவு சின்னம் அமைப்பதை எதிர்ப்பது தமிழர்களுக்கு அவமானம் - நொச்சிக்குப்பம் பெருமாள்

மெரினா கடற்கரை பெயரையே மாற்ற வேண்டும். கருணாநிதி மெரினா என பெயர் சூட்ட வேண்டும் - வணிகர் சங்கம்

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கருத்துச் சொல்ல சீமான் நேரடியாக பங்கேற்பு. தி.மு.க. தரப்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளதால் பெரும் பரபரப்பு


Tags:    

மேலும் செய்திகள்