- சிதம்பரம் போக்குவரத்து பணிமனை ஊழியர், பணிச்சுமை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிதம்பரத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில், சி.முட்லூர் பகுதியை சேர்ந்த சிவபாரதி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மெக்கானிக் வேலை செய்து வந்த சிவபாரதிக்கு, மாரடைப்பு வந்ததால் மற்ற வேலைகளை செய்து வந்துள்ளார். பின்னர் அவருக்கு கை மற்றும் கால் செயல் இழந்ததால், அலுவலக பணியில் அவரால் முடிந்த பணிகளை செய்யுமாறு அப்போது உள்ள கிளை மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், டீசல் கணக்கு விபரங்களை எழுதி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிதாக ஒரு மாதத்திற்கு முன்பு பொறுப்பேற்ற அசோக்குமார் என்ற மேலாளர், கை, கால் செயல்படாமல் இருக்கும் சிவபாரதியை கட்டாயமாக டீசல் போடும் பணியை கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. உடல்நிலை சரியில்லாததற்கு மருத்துவச் சான்று கொடுத்தும் அதனை மேலாளர் ஏற்க மறுத்துவிட்டு, கொடுக்கும் வேலையை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சிவபாரதி, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.