திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா, சூரசம்ஹாரம் இன்று நடைபெறவுள்ள நிலையில், கோவில் முழுவதும் பக்தர் கூட்டம் நிரம்பி வழிகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2ஆம் தேதி கந்தர் சஷ்டி விழா தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான
சூரசம்கார விழா இன்று மாலை திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரசம்காரம் நடைபெறும் பகுதி மற்றும் கடற்கரை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் இதில் ஈடுபட உள்ளனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக ஆங்காங்கே தற்காலிக பேருந்து நிலையங்களும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.